திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் கோவில் – 3,800 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறையின் மேல் எழுந்த தென் கயிலாயம்
தமிழ்நாட்டின் இதயப் பகுதியாக விளங்கும் திருச்சிராப்பள்ளி நகரை எந்தத் திசையிலிருந்து நெருங்கினாலும் கம்பீரமாகக் காட்சியளிக்கும் மலைக்கோட்டை, இயற்கை மற்றும் ஆன்மிக வரலாற்றின் அபூர்வச் சேர்க்கையாக திகழ்கிறது. உலகிலேயே மிகப் பழமையான பாறைகளில் ஒன்றாகக் கருதப்படும் இந்த மலைப்பாறை சுமார் 3,800 மில்லியன் (3800 million) ஆண்டுகள் பழமையானது என்று புவியியல் ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு மில்லியன் ஆண்டு என்பது 10 லட்சம் ஆண்டுகள் என்பதை நினைத்தால், இந்தப் பாறையின் வயது மனித குல வரலாற்றை விட பல ஆயிரம் மடங்கு தொன்மையானது என்பதில் ஐயமில்லை.
83 மீட்டர் உயரம் கொண்ட இந்த மலைக்கோட்டைப் பாறை, 344-க்கும் மேற்பட்ட படிகள் கொண்டது. மேலே ஏறிச் சென்றால், ஏசு பிறப்பதற்கு மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பே செதுக்கப்பட்ட கல்வெட்டுகளைக் காணலாம். இக்கல்வெட்டுகள், இந்த மலைப்பகுதி தொன்மையான குடியிருப்பு மற்றும் வழிபாட்டு மையமாக இருந்ததற்கான உறுதியான ஆதாரங்களாக உள்ளன.
பல்லவர் காலச் சான்றுகள்
திருச்சி மலைக்கோட்டை கடந்த 6ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மகேந்திரவர்மன் I காலத்தில் மேம்படுத்தப்பட்டதாக கல்வெட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. குணபரன் என்ற பெயராலும் அழைக்கப்பட்ட இவர், பல்லவ அரசாட்சியின் சிறந்த கட்டிடக் கலை வளர்ச்சிக்கு காரணமானவர். அவரால் குடையப்பட்ட இரண்டு குடவரைக் கோவில்கள் இன்றும் மலையில் காணப்படுகின்றன. இவை தமிழகத்தின் ஆரம்பகால பாறைக் குடைவரைக் கோவில் மரபின் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.
தாயுமானவர் கோவில் – தென் கயிலாயம்
மலைக்கோட்டையின் மத்தியில் அமைந்துள்ளது தாயுமானவர் கோவில், திருச்சிராப்பள்ளி. 273 அடி உயரத்தில், சுமார் 417 படிகளைக் கடந்தே அடையக்கூடிய இந்த ஆலயம் “தென் கயிலாயம்” என்று போற்றப்படுகிறது. இத்தலத்தில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக, மேற்குப் பார்த்த நிலையில் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். சுமார் 5 அடி உயரம் கொண்ட இந்த லிங்கத் திருமேனி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய சிவலிங்கங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
முதல் தளத்தில் இறைவி மட்டுவார் குழலம்மை சந்நிதி, இரண்டாம் தளத்தில் தாயுமானசுவாமி சந்நிதி அமைந்துள்ளன. இரு சந்நிதிகளும் மேற்குநோக்கி அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்று அடுக்குகளாக பாறையின் மீது கட்டப்பட்டுள்ள இந்த ஆலயம், பழங்காலத் திராவிடக் கட்டிடக் கலையின் சிறப்பை எடுத்துரைக்கிறது.
திரிசிரன் புராணக் கதை
இத்தலம் திரிசிரபுரம் என்ற பெயராலும் அழைக்கப்படுகிறது. புராணக் கதையின்படி, திரிசரன் என்ற அரக்கன் இங்கு சிவபெருமானை வழிபட்டு பேறு பெற்றதாகக் கூறப்படுகிறது. அதனால் இத்தலம் “திரிசிரபுரம்” என்று அழைக்கப்பட்டது.
மேலும், தென் கயிலாயம் என்ற பெயருக்கு பின்னாலும் ஒரு சுவையான புராணம் உள்ளது. ஒருமுறை கைலாயத்தில் சிவபெருமானை வணங்க வந்த ஆதிசேஷன் மற்றும் வாயுபகவான் இடையே ஏற்பட்ட மோதலில், ஆதிசேஷன் கைலாய மலையை இறுக்கப் பற்ற, அதைத் தகர்க்க வாயு பலத்த காற்றை வீசியதாகக் கூறப்படுகிறது. அதன் விளைவாக கைலாயத்தின் மூன்று துண்டுகள் புறப்பட்டு, திருக்காளத்தி, திருச்சி மற்றும் இலங்கையில் உள்ள திரிகோணமலை ஆகிய இடங்களில் விழுந்ததாக புராணம் சொல்கிறது. இதனால் திருச்சி மலை “தென் கயிலாயம்” என்ற பெருமையை பெற்றது.
உச்சிப் பிள்ளையார் கோவில்
மலையின் உச்சியில் அமைந்துள்ளது உச்சிப் பிள்ளையார் கோவில். பக்தர்கள் கடினமான படிகளை ஏறிச் சென்று விநாயகரை தரிசிக்கின்றனர். இங்கிருந்து திருச்சி நகரம் முழுவதும் கண்கொள்ளாக் காட்சியளிக்கிறது. குறிப்பாக காவேரி நதி மற்றும் சுற்றுப்புறப் பசுமை நிலங்கள் மனதை மயக்கும்.
தெப்பக்குளம் மற்றும் திருவிழா
மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள தெப்பக்குளம், ஆண்டு தோறும் நடைபெறும் தெப்பத் திருவிழாவால் புகழ்பெற்றது. இந்தத் திருவிழாவில் தெய்வங்கள் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் குளத்தில் சுற்றிவருவது பக்தர்களை ஆனந்தத்தில் ஆழ்த்துகிறது. இது திருச்சியின் முக்கியமான ஆன்மிக மற்றும் பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்றாகும்.
ராபர்ட் கிளைவ் இல்லம் – அருங்காட்சியகம்
மலைக்கோட்டைக்கு அருகில், ஆங்கிலேய ஆட்சிக் கால தளபதி ராபர்ட் கிளைவ் வாழ்ந்த இல்லம் அமைந்துள்ளது. தற்போது அது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு சிறந்த சிற்பங்கள், வெண்கலச் சிலைகள் மற்றும் வரலாற்றுச் சான்றுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. திங்கள் கிழமை மற்றும் அரசு விடுமுறை நாட்களைத் தவிர, காலை 8 மணி முதல் 1 மணி வரை மற்றும் மாலை 2 மணி முதல் 5 மணி வரை பார்வைக்கு திறந்திருக்கும்.
தேவாரப் புகழ் பெற்ற சிவத்தலம்
தாயுமானவர் கோவில், தேவாரப் பாடல் பெற்ற சிவத்தலங்களில் ஒன்றாகும். சைவ நாயன்மார்களால் போற்றப்பட்ட இத்தலம், ஆன்மிக ஆற்றல் மிகுந்த தலமாக பக்தர்களால் கருதப்படுகிறது. குழந்தைப்பேறு வேண்டி வருபவர்கள் இங்கு பிரார்த்தனை செய்தால், இறைவன் தாயாக வந்து காக்கிறார் என்ற நம்பிக்கை காரணமாக “தாயுமானவர்” என்ற பெயர் பெற்றது.
இயற்கை, வரலாறு, ஆன்மிகம் – மூன்றின் சங்கமம்
3,800 மில்லியன் ஆண்டுகள் பழமையான பாறையின் மீது எழுந்த இந்த மலைக்கோட்டை, இயற்கையின் தொன்மை, பல்லவர் காலக் கட்டிடக் கலை, சைவ சமயப் பாரம்பரியம், புராணக் கதைகள், ஆங்கிலேயர் கால வரலாறு என பல அடுக்குகளைக் கொண்ட ஒரு அரிய சின்னமாக விளங்குகிறது.
திருச்சியைச் சுற்றுலா செல்லும் யாரும் மலைக்கோட்டை மற்றும் தாயுமானவர் கோவிலைத் தவறாமல் தரிசிக்கின்றனர். ஆன்மிக நம்பிக்கை, வரலாற்று சான்றுகள், இயற்கைக் காட்சிகள் அனைத்தையும் ஒரே இடத்தில் அனுபவிக்க விரும்புவோருக்கு இது ஒரு சிறந்த தலமாகும்.