news விரைவுச் செய்தி
clock
நள்ளிரவில் குடும்பத்தினர் கண்முன் செங்கல் சூளை மேஸ்திரி கொடூரக் கொலை!

நள்ளிரவில் குடும்பத்தினர் கண்முன் செங்கல் சூளை மேஸ்திரி கொடூரக் கொலை!

"அப்பாவ துண்டு துண்டா வெட்டிட்டான்.." நடந்ததைச் சொல்லி கதறும் மகள்: திருவாரூரில் கொடூரம்

- ரிப்போர்ட்டர் அன்பழகன்

திருவாரூர்: நள்ளிரவில் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது, வீட்டின் கதவைத் தட்டி உள்ளே நுழைந்த மர்ம கும்பல் ஒன்று, மனைவியும் மகளும் பார்த்துக்கொண்டிருக்கும்போதே குடும்பத் தலைவரை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்துள்ள சம்பவம் திருவாரூர் மாவட்டத்தில் பெரும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.

குற்றவாளிகளைக் கைது செய்யக் கோரி உறவினர்கள் உடலை வாங்க மறுத்துப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி

திருவாரூர் மாவட்டம் குடவாசல் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேங்காளிபுரம் அருகே உள்ள எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருமுருகன் (வயது 48). இவருக்கு சுதா என்ற மனைவியும், சுமன் என்ற மகளும் உள்ளனர். திருமுருகன் அப்பகுதியில் சொந்தமாக செங்கல் சூளை அமைத்து, மேஸ்திரியாகத் தொழில் செய்து வந்தார்.

தினமும் செங்கல் சூளை வேலைகளை முடித்துவிட்டு இரவு தாமதமாக வீட்டிற்கு வருவது வழக்கம். நேற்றும் வழக்கம் போல தனது செங்கல் சூளை பணிகளை முடித்துவிட்டு இரவு வீட்டிற்குத் திரும்பியுள்ளார் திருமுருகன். சாப்பிட்டுவிட்டு மனைவியும் மகளும் ஒருபுறம் தூங்க, அவரும் உறங்கச் சென்றுள்ளார்.

நள்ளிரவில் நடந்த பயங்கரம்

அதிகாலை நேரம், அனைவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தபோது வீட்டின் வெளிப்பக்கக் கதவு பலமாகத் தட்டப்படும் சத்தம் கேட்டுள்ளது. யாரோ அவசரமாகத் தட்டுகிறார்கள் என நினைத்து திருமுருகன் தூக்கக் கலக்கத்துடன் எழுந்து சென்று கதவைத் திறந்துள்ளார்.

கதவைத் திறந்த மறுகணமே, இருளில் மறைந்திருந்த 6 பேர் கொண்ட மர்ம கும்பல் ஒன்று கத்தி, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளது. என்ன நடக்கிறது, அவர்கள் யார் என்று திருமுருகன் சுதாரிப்பதற்கு முன்பாகவே, அந்த கும்பல் அவரை ஈவு இரக்கமின்றி சரமாரியாக வெட்டத் தொடங்கியது.

கண்முன்னே துடிதுடித்து அடங்கிய உயிர்

சத்தம்கேட்டு விழித்தெழுந்த மனைவி சுதாவும், மகள் சுமனும் கண்முன்னே கணவனும் தந்தையும் ரத்த வெள்ளத்தில் வெட்டப்படுவதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்தனர். அவர்கள் தடுத்துக் கூச்சலிட்ட போதிலும், ஆயுதங்களுடன் இருந்த கும்பலின் வெறிச்செயலைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. தலை, கழுத்து என உடலின் பல பகுதிகளில் பலத்த வெட்டுக் காயங்கள் அடைந்த திருமுருகன், ரத்த வெள்ளத்தில் சரிந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.

"அப்பாவ துண்டு துண்டா வெட்டிட்டான்.. என் சாமிய வெட்டிப் போட்டுட்டான்.." என்று ரத்த வெள்ளத்தில் கிடந்த தந்தையின் உடலைப் பார்த்து அந்த இளமகள் கதறி அழுத காட்சிகள், அங்கிருந்த அனைவரின் நெஞ்சையும் உலுக்கும் படியாக அமைந்திருந்தது. கொலைச் செயலை முடித்த அந்த 6 பேர் கொண்ட கும்பல், வீட்டின் வெளியே தாங்கள் நிறுத்தி வைத்திருந்த 3 இருசக்கர வாகனங்களில் ஏறி மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றுவிட்டது.

தனிப்படைகள் அமைப்பு மற்றும் போலீஸ் விசாரணை

அலறல் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், உடனடியாக இது குறித்து குடவாசல் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், திருமுருகனின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தக் கொடூரக் கொலை குறித்து குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணையைத் தொடங்கியுள்ளனர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்ததா? அல்லது தொழில் போட்டியில் கூலிப்படையை ஏவி இக்கொடூரம் அரங்கேற்றப்பட்டதா? என்ற பல கோணங்களில் போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர்.

சம்பவ இடத்தின் அருகிலுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து வரும் போலீசார், தற்போது சந்தேகத்தின் பேரில் இருவரைப் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உறவினர்கள் போராட்டம்

இதற்கிடையே, திருமுருகனின் படுகொலையைக் கண்டித்தும், கொலையாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தியும், புதுக்குடி பகுதியில் அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். குற்றவாளிகளைக் கைது செய்யும் வரை திருமுருகனின் உடலைப் பெற்றுக்கொள்ள மாட்டோம் என அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது. காவல் துறை அதிகாரிகள் அவர்களிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

குடும்பத்தினர் கண்முன்னேயே நள்ளிரவில் அரங்கேறியுள்ள இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

இணைந்திருங்கள்

தேர்தல் களம்

முக்கிய பிரிவுகள்

அண்மைக் கருத்துகள்

  • user by செல்வா சிவபெருமாள்

    கூட்டுறவு நகை தள்ளுபடி பண்ண வேண்டும்

    quoto
  • user by PRASATH D

    👍

    quoto
  • user by Karthik

    சிறந்த நடிகர், நடிகைகளுக்கு 1 பவுன்

    quoto

Please Accept Cookies for Better Performance