news விரைவுச் செய்தி
clock
ஆளுநர் உரை ஏமாற்றம்! முதல்வர் விஜய்யின் தவெக அரசை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!

ஆளுநர் உரை ஏமாற்றம்! முதல்வர் விஜய்யின் தவெக அரசை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!

"புதிய திட்டங்களும் இல்லை.. வாக்குறுதியும் நிறைவேறவில்லை!" முதல்வர் விஜய்யின் தவெக அரசை வறுத்தெடுத்த எடப்பாடி பழனிசாமி!

தமிழக சட்டமன்றத்தில் இன்று வாசிக்கப்பட்ட ஆளுநர் உரை குறித்து, அ.தி.மு.க பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சரமாரியான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். ஆளுநர் உரையில் மக்கள் எதிர்பார்க்கும் புதிய திட்டங்கள் எதுவும் இடம்பெறவில்லை என்றும், தமிழக வெற்றிக் கழக (தவெக) அரசாங்கம் தேர்தல் நேரத்தில் அளித்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

புதிய திட்டங்கள் இல்லாத வெற்று உரை

: செய்தியாளர்களைச் சந்தித்த எடப்பாடி பழனிசாமி பேசுகையில், "ஆளுநர் உரை என்பது ஒரு அரசாங்கத்தின் புதிய தொலைநோக்குத் திட்டங்களை மக்களுக்குத் தெரிவிக்கும் ஒரு அறிக்கையாகும். ஆனால், இன்று வாசிக்கப்பட்ட ஆளுநர் உரையில் எந்தவொரு புதிய திட்டமும் இடம்பெறவில்லை. முதலமைச்சர் டெல்லிக்குச் சென்ற செய்தியும், இரண்டு நாட்களுக்கு முன்பு நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கையில் உள்ள பழைய செய்திகளும் தான் ஆளுநர் உரையில் இடம்பெற்றுள்ளன. சமீபத்தில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சுமார் 436 திட்டங்கள் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்கள். ஆனால், அந்தத் திட்டங்கள் குறித்த எந்தவொரு விவரமும், அதற்கான நிதி ஒதுக்கீடும் இந்த உரையில் இடம்பெறவில்லை," என்று சாடினார்.

கண்டுகொள்ளப்படாத சட்டம்-ஒழுங்கு

தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாக அவர் வேதனை தெரிவித்தார். "ஆட்சிக்கு வருவதற்கு முன்பு, பெண்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்படும், போதைப்பொருள் ஒழிக்கப்படும் என வீரவசனம் பேசினார்கள். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்ற இந்த 38 நாட்களில் மட்டும் சுமார் 150 போக்சோ (POCSO) வழக்குகள் உட்பட பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் 276 பதிவாகியுள்ளன. 130 கொலைகள் நடந்துள்ளன. போதைப்பொருள் விற்பனையும் முன்பை விட அதிகரித்துள்ளது. 'சிங்கப்பெண் சிறப்பு படை' என்று ஒன்றை அமைத்தார்கள். இப்போது அந்தப் படைக்கே பாதுகாப்பு கொடுக்க இன்னொரு படை தேவைப்படும் அளவுக்குத்தான் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது," என விமர்சித்தார்.

விவசாயிகளுக்கு இழைக்கப்பட்ட துரோகம்

தவெக அரசு விவசாயிகளுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் அவர்களை வஞ்சித்துவிட்டதாக ஈபிஎஸ் குற்றம் சாட்டினார். "தேர்தல் நேரத்தில் 5 ஏக்கருக்கு குறைவான நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும் என அறிவித்தார்கள். ஆனால், தற்போது 75,000 ரூபாய் வரையிலான கடனுக்கு மட்டுமே முழுத் தள்ளுபடி, அதற்கு மேல் இருந்தால் 35,000 மட்டுமே தள்ளுபடி என நிபந்தனை விதித்து விவசாயிகளை ஏமாற்றியுள்ளனர்."

மேலும், குறுவை சாகுபடிக்காக ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாததையும் அவர் சுட்டிக்காட்டினார். "கர்நாடக அரசிடம் உரியப் பேச்சுவார்த்தை நடத்தி நமக்கான பங்கு நீரைப் பெற்றிருக்க வேண்டும். தவெக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களைப் பயன்படுத்தியாவது கர்நாடக அரசிடம் பேசியிருக்கலாம். ஆனால், எந்தவொரு முயற்சியும் எடுக்காததால் டெல்டா விவசாயிகளும், விவசாயத் தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்" என்று அவர் வருத்தம் தெரிவித்தார்.

வாக்குறுதிகள் காற்றில் பறந்தன

குடும்பப் பெண்களுக்கு 1000 ரூபாய் என்பது 2500 ரூபாயாக உயர்த்தப்படும், முதியோர் உதவித்தொகை 3000 ஆக உயர்த்தப்படும், ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும், மணப்பெண்ணுக்கு ஒரு சவரன் தங்கம், அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைக்குத் தங்க மோதிரம், வேலையில்லா பட்டதாரிகளுக்கு 4000 ரூபாய் உதவித்தொகை எனப் பல கவர்ச்சி வாக்குறுதிகளை அளித்துவிட்டு, ஆளுநர் உரையில் இதுபற்றி எந்தவொரு வார்த்தையையும் குறிப்பிடாமல் இந்த அரசாங்கம் ஏமாற்றிவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.

மின்வெட்டுக்குக் காரணம் ஃபியூஸ் கேரியர் திருட்டா?

தமிழகத்தில் தற்போது அடிக்கடி மின்வெட்டு ஏற்படுவது குறித்துக் கடுமையாகச் சாடிய அவர், "தேவையான மின்சாரத்தைக் கொள்முதல் செய்து மக்களுக்குத் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும். இரவில் தூக்கத்தைத் தொலைத்து மக்கள் வீதிக்கு வந்து போராடுகிறார்கள். முந்தைய திமுக ஆட்சியில் மின்வெட்டுக்குக் காரணம் அனில் ஓடியது என்றார்கள். இந்த தவெக ஆட்சியில் 'ஃபியூஸ் கேரியர்' திருட்டுப் போவதால்தான் மின்வெட்டு ஏற்படுகிறது என்று புதுக் காரணம் சொல்கிறார்கள். தமிழ்நாடு முழுவதும் எப்படி ஒரே நேரத்தில் ஃபியூஸ் கேரியர் திருட்டு போகும்? இது முற்றிலும் நிர்வாகக் கோளாறு," என விமர்சித்தார்.

வெள்ளை அறிக்கை ஒரு கண்துடைப்பு

இறுதியாக, நிதியமைச்சர் வெளியிட்ட வெள்ளை அறிக்கை குறித்துப் பேசிய அவர், "10 லட்சம் கோடி ரூபாய் கடன் இருப்பதும், துறை ரீதியான நஷ்டங்களும் கடந்த இடைக்கால பட்ஜெட்டிலேயே (Interim Budget) குறிப்பிடப்பட்ட பழைய தகவல்கள்தான். கடன் இருப்பது தெரிந்தேதான் தேர்தல் நேரத்தில் பல கவர்ச்சி வாக்குறுதிகளை மக்களுக்கு அள்ளி வீசினார்கள். இப்போது கடனைக் காரணம் காட்டி வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் தப்பிக்கும் ஒரு தந்திரமாகவே இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டிருக்கிறார்கள்," என்று தனது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்தார்.

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

இணைந்திருங்கள்

தேர்தல் களம்

முக்கிய பிரிவுகள்

அண்மைக் கருத்துகள்

  • user by செல்வா சிவபெருமாள்

    கூட்டுறவு நகை தள்ளுபடி பண்ண வேண்டும்

    quoto
  • user by PRASATH D

    👍

    quoto
  • user by Karthik

    சிறந்த நடிகர், நடிகைகளுக்கு 1 பவுன்

    quoto

Please Accept Cookies for Better Performance