news விரைவுச் செய்தி
clock
காங்கிரஸில் உள்கட்சிப் பூசல்; கதறி அழுத ஸ்ரீநிதி! ஸ்டாலின் முன்னிலையில் அதிரடியாக திமுகவில் ஐக்கியம்!

காங்கிரஸில் உள்கட்சிப் பூசல்; கதறி அழுத ஸ்ரீநிதி! ஸ்டாலின் முன்னிலையில் அதிரடியாக திமுகவில் ஐக்கியம்!

 "பெண் தலைவர்களே வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை!" - காங்கிரஸில் இருந்து விலகி மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் ஸ்ரீநிதி! பின்னணி என்ன?

சென்னை:
தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அதிரடி திருப்பங்கள் அரங்கேறி வரும் நிலையில், காங்கிரஸ் கட்சியின் முக்கிய இளம் பெண் தலைவர்களில் ஒருவரான ஸ்ரீநிதி மோகன், அக்கட்சியில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகி திராவிட முன்னேற்றக் கழகத்தில் (திமுக) இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்வில், திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து ஸ்ரீநிதி தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டார். இந்த திடீர் அரசியல் நகர்வு தமிழக அரசியல் வட்டாரங்களிலும், குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணிக் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யார் இந்த ஸ்ரீநிதி?

கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த தமிழக சட்டமன்றப் பேரவைத் தேர்தலில், கோவையின் முக்கிய தொகுதிகளில் ஒன்றான சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராகக் களம் இறங்கியவர் ஸ்ரீநிதி. அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் கட்சியின் (IYC) தேசிய செயலாளராகப் பதவி வகித்து வந்த இவர், டெல்லி தலைமை வரை மிகச் சிறந்த செல்வாக்கைப் பெற்றிருந்தார். தீவிரமான களப்பணி, சமூக ஊடகங்களில் ஆக்டிவாக இருப்பது என இளைஞர்கள் மத்தியில் கவனம் பெற்ற ஒரு பெண் தலைவராக ஸ்ரீநிதி பார்க்கப்பட்டார்.

விலகலுக்கான பின்னணி என்ன?

தேர்தல் முடிவுகளுக்குப் பின் அமைதி காத்து வந்த ஸ்ரீநிதி, திடீரென காங்கிரஸ் கட்சியின் முதன்மை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு அளித்த பிரத்யேக பேட்டியில், காங்கிரஸ் கட்சிக்குள்ளே இருக்கும் சில கசப்பான உண்மைகளையும் உள்கட்சிப் பூசல்களையும் வெளிப்படையாகப் போட்டு உடைத்துள்ளார்.
அவர் பேசுகையில், "நான் கடந்த ஐந்து வருடங்களாக காங்கிரஸ் கட்சிக்காக உண்மையாக உழைத்தேன். மதவாத சக்திகளுக்கு எதிரான ஒரு ஜனநாயகக் கட்சி என்ற நோக்கில்தான் நான் காங்கிரஸில் இணைந்தேன். ஆனால், அங்கே நிலவும் உள்கட்சிப் பூசல் என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியது. துரதிர்ஷ்டவசமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்குள் இருக்கும் சில மூத்த பெண் தலைவர்களே, இளம் பெண் அரசியல்வாதிகள் வளர்வதை விரும்புவதில்லை. என் மீது தேவையில்லாத, அடிப்படையற்ற பொய் குற்றச்சாட்டுகளை அடுக்கடுக்காக சுமத்தினார்கள்" எனத் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

தொடரும் குதிரை பேரமும் அதிருப்தியும்:

மேலும், காங்கிரஸ் கட்சியின் தற்போதைய கொள்கை நிலைப்பாடுகள் குறித்தும், அண்மையில் தமிழக அரசியல் களத்தில் அரங்கேறிய கூட்டணிக் குழப்பங்கள் குறித்தும் அவர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் போஸ்ட்-போல் (Post-poll) கூட்டணியான தமிழக வெற்றிக் கழகம் (டிவிகே), காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளுக்கு முற்றிலும் எதிரான அதிமுகவைச் சேர்ந்த மூன்று முன்னாள் எம்.எல்.ஏ-க்களைத் தங்களது கட்சியில் இணைத்துக் கொண்டது. மதவாத மற்றும் பிரித்தாளும் சக்திகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று கூறும் தேசிய கட்சியான காங்கிரஸ், இந்த விசயத்தில் மௌனம் காப்பதும், எந்தவொரு தார்மீக நிலைப்பாட்டையும் எடுக்கத் தவறியதும் தனக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியதாக ஸ்ரீநிதி குறிப்பிட்டுள்ளார். இது குறித்து டெல்லி மேலிடத்திற்கும், உண்மை கண்டறியும் குழுவிற்கும் கடிதம் அனுப்பியும் எந்த ஒரு துரிதமான நடவடிக்கையும் எடுக்கப்படாததால், தான் காங்கிரஸில் இருந்து முற்றிலும் விலகும் முடிவை எடுத்ததாக அவர் விளக்கியுள்ளார்.

திமுகவில் இணைந்தது ஏன்?

காங்கிரஸ் கட்சியின் உட்கட்சிப் பூசலால் சோர்வடைந்த ஸ்ரீநிதிக்கு, தமிழக மக்களின் உரிமைகளுக்காகவும், சமூக நீதிப் பாதையிலும் தொய்வில்லாமல் பயணிக்கும் ஒரே இயக்கமாக திமுக மட்டுமே தெரிந்துள்ளது. மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆளுமையான தலைமை மற்றும் வழிகாட்டுதலின் கீழ், தமிழகத்தில் உண்மையான மக்கள் சேவையைத் தொடர முடியும் என்ற நம்பிக்கையில்தான் தான் திமுகவில் இணைந்ததாக அவர் அண்ணா அறிவாலயத்தில் தெரிவித்தார். ஸ்ரீநிதியை அன்போடு வரவேற்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவருக்குக் கட்சியில் உரிய அங்கீகாரமும், மக்கள் பணியாற்ற நல்லதொரு களமும் உருவாக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.

அரசியல் முக்கியத்துவம்::

கடந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதிப் பங்கீட்டிலும், தேர்தல் களத்திலும் பல்வேறு சலசலப்புகள் நிலவி வந்ததை அரசியல் விமர்சகர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக, தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள், காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகள் குறித்தும், நன்றி மறந்த அரசியல் குறித்தும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். இந்த இக்கட்டான சூழ்நிலையில், காங்கிரஸின் தேசிய பொறுப்பில் இருந்த ஒரு முக்கிய பெண் வேட்பாளர், அக்கட்சியைத் துறந்து நேரடியாக திமுகவில் தஞ்சமடைந்தது, காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் விழுந்த பலத்த அடியாகவே பார்க்கப்படுகிறது.
ஸ்ரீநிதியின் இந்த அதிரடிப் பாய்ச்சல், கோவை மண்டல காங்கிரஸ் கட்சிக்கு பின்னடைவை ஏற்படுத்திய அதே வேளையில், கோவை பகுதியில் தங்களை மேலும் வலுப்படுத்த நினைக்கும் திமுகவிற்கு இது ஒரு கூடுதல் பலமாக அமைந்துள்ளது என்பதில் எவ்வித ஐயமுமில்லை

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

தொடர்புடைய செய்திகள்

தேர்தல் களம்

vote-image

காலை நேரத்தில் நீங்கள் முதலில் எந்த தகவலைப் பார்க்கிறீர்கள்?

0%
100%
0%
0%
0%

இணைந்திருங்கள்

அண்மைச் செய்திகள்

முக்கிய பிரிவுகள்

அண்மைக் கருத்துகள்

  • user by Anbu

    Very useful, pls keep on post daily

    quoto
  • user by செல்வா சிவபெருமாள்

    கூட்டுறவு நகை தள்ளுபடி பண்ண வேண்டும்

    quoto
  • user by PRASATH D

    👍

    quoto

Please Accept Cookies for Better Performance