news விரைவுச் செய்தி
clock
அண்ணாவின் வழியில் கலைஞர் முதல்வரான நாள்: பிப்.10, 1969 - ஒரு வரலாற்றுப் பதிவு!

அண்ணாவின் வழியில் கலைஞர் முதல்வரான நாள்: பிப்.10, 1969 - ஒரு வரலாற்றுப் பதிவு!

"எழுதிச் சென்றார் அண்ணா... செதுக்கிச் சென்றார் கலைஞர்!" - முத்தமிழறிஞர் கருணாநிதி முதன்முதலில் முதல்வராக அரியணை ஏறிய வரலாற்று நாள் (10.02.1969)

சென்னை: தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு நாள் பிப்ரவரி 10. ஆம், திராவிட இயக்கத்தின் முடிசூடா மன்னராக, அரை நூற்றாண்டு காலம் தமிழர்களின் நெஞ்சங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருந்த முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள், முதன்முறையாகத் தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் இன்று (10.02.1969).

அண்ணாவின் தீர்க்கதரிசனமும் மன்னார்குடி மாநாடும்

"தம்பி... இதோ திமுகவின் முதல் பாதியை நான் எழுதிவிட்டேன், மீதி பாதியை என் தம்பி கருணாநிதி எழுதுவார்!" - மன்னார்குடி மண்ணில் தென்றலாய் வீசிய பேரறிஞர் அண்ணாவின் அந்த தீர்க்கதரிசன மொழி, வெறும் மேடைப் புகழ்ச்சியல்ல. அது, காலத்தின் சுவடுகளில் இந்தத் தமிழ் நிலத்தின் விதியை மாற்றப்போகும் ஒரு மாபெரும் சகாப்தத்திற்கான முன்னுரை!

அண்ணாவின் மறைவு என்ற ஈடுசெய்ய முடியாத பேரிழப்பால் தவித்த திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் ஒரு பெரும் ஆறுதலாக, நம்பிக்கையின் ஒளிவிளக்காக உருவெடுத்தவர் கலைஞர். அண்ணா காட்டிய வழியில், கொள்கைக்காகத் தண்டவாளத்தில் தலைவைக்கச் சொன்னாலும், நாட்டை வழிநடத்தத் தலைமைப் பொறுப்பை ஏற்கச் சொன்னாலும், இரண்டையும் சமமாகப் பாவித்து நெஞ்சுறுதியோடு களமிறங்கியவர் நம் தலைவர் கலைஞர்.

அரை நூற்றாண்டு கால அரசியல் ஆளுமை

1969-ல் அண்ணாவின் மறைவுக்குப் பின் முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர், தனது வாழ்நாளில் ஐந்து முறை தமிழகத்தின் முதல் அமைச்சராக மகுடம் சூடியவர். அரை நூற்றாண்டு காலம் கழகத்தின் காவல் அரணாய், அசைக்க முடியாத ஆலமரமாக நின்று கட்சியையும் ஆட்சியையும் வழிநடத்தினார்.

அரசியல் சதுரங்கத்தில் அவரை வெல்ல ஆள் இல்லை என்பதற்கு வரலாறே சாட்சி. 1971-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 182 இடங்களை வென்று, தமிழக அரசியல் வரலாற்றில் எந்தவொரு கட்சியும் தொட முடியாத அசைக்க முடியாத பலமான ஆட்சியை அமைத்தார். அதேபோல, 2016-ம் ஆண்டுத் தேர்தலில் 89 இடங்களுடன் இந்தியாவிலேயே ஒரு பலமான எதிர்க்கட்சியை உருவாக்கி, ஜனநாயகத்தின் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்ற இரு கண்களையும் தன் வசப்படுத்திய ஒப்பற்ற தலைவர் அவர்.

நவீன தமிழ்நாட்டின் சிற்பி: சரித்திரம் சொல்லும் சாதனைகள்

இன்றைய 'நவீன தமிழ்நாடு' (Modern Tamil Nadu) என்பது கலைஞர் செதுக்கிய சிற்பமே. அவர் முதல்வராக இருந்த காலகட்டங்களில் கொண்டுவரப்பட்ட ஒவ்வொரு திட்டமும், ஒவ்வொரு சட்டமும், ஒவ்வொரு கட்டடமும் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதையே நோக்கமாகக் கொண்டிருந்தன. அவர் பெயர் சொல்லும் சில முத்தாய்ப்பான திட்டங்கள்:

  • சமூக நீதி மற்றும் மனித உரிமை: மனிதனை மனிதன் இழுக்கும் அவலநிலையை மாற்றி அமைத்த 'கை ரிக்சா ஒழிப்பு' திட்டம், அவருக்குள் இருந்த ஒரு சமூகப் போராளியைக் காட்டியது. 'அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்' என்ற சட்டம், தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றியது.

  • பெண்கள் மேம்பாடு: பெண்களுக்குச் சொத்தில் சம உரிமை வழங்கும் சட்டம், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு, மற்றும் கிராமப்புறப் பெண்களின் பொருளாதாரத்தை உயர்த்திய 'மகளிர் சுயஉதவிக் குழு' (SHG) எனப் பெண்களின் வாழ்வில் ஒளியேற்றியவர் கலைஞர்.

  • கல்வி மற்றும் சுகாதாரம்: ஏழை எளிய மாணவர்களுக்காக இலவசக் கல்வி மற்றும் இலவச பஸ் பாஸ் திட்டம், முதியோர்களின் பார்வைத் திறனை மீட்டெடுத்த 'கண்ணொளித்திட்டம்', உயிர்காக்கும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை மருத்துவத்தையும் கல்வியையும் சாமானியர்களின் வீட்டு வாசலுக்குக் கொண்டு வந்தன.

  • விவசாயம் மற்றும் அடித்தட்டு மக்கள் நலன்: உழவர்கள் தாங்கள் விளைவித்த பொருள்களுக்குத் தாங்களே விலை நிர்ணயம் செய்யும் உன்னதமான 'உழவர் சந்தை' திட்டம் அவரது மாபெரும் சாதனை. குடிசை வாழ் மக்களின் வாழ்வில் விடியலைத் தர 'குடிசை மாற்று வாரியம்', மாநிலம் முழுவதும் தடையற்ற குடிநீர் மற்றும் வடிகால் வாரியம் என அடிப்படை வசதிகளை மேம்படுத்தினார்.

  • தொழில்நுட்பம் மற்றும் உள்கட்டமைப்பு: இந்தியாவின் தகவல் தொழில்நுட்பப் புரட்சியைத் தமிழகம் நோக்கித் திருப்பிய 'டைடல் பார்க்' (TIDEL Park) உள்ளிட்ட தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள், எண்ணற்ற பல்வேறு தொழில் துறை நிறுவனங்கள், சென்னை மாநகரின் முகவரியை மாற்றிய மெட்ரோ ரயில் திட்டம், மற்றும் மாநிலம் முழுவதும் மேம்படுத்தப்பட்ட சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் கலைஞரின் தொலைநோக்குப் பார்வைக்குச் சான்றுகள்.

அண்ணா விட்டுச் சென்ற பணியும், தளபதியின் தொடர்ச்சியும்

மறக்க முடியாத அந்த மாபெரும் தலைவர், தன் சக அமைச்சர்களுடன் தமிழகத்தின் முதல்வராக முதன்முதலில் அரியணை ஏறிய நாள் இன்று (பிப்.10). அண்ணா விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து, திராவிடப் பேரியக்கத்தை ஒரு கட்டுக்கோப்பான குடும்பமாக வழிநடத்தி, சமூக நீதியைக் காத்து நின்ற அந்தச் சரித்திர நாயகனை இந்த நாளில் போற்றுவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

எழுதிச் சென்றார் அண்ணா... அதைச் செதுக்கிச் சென்றார் கலைஞர்!

இன்று, அந்தச் சிற்பத்தை, கலைஞர் விட்டுச் சென்ற அந்தப் பாதையைச் சற்றும் பிசகாமல் மெருகேற்றுகிறார் நம் தளபதி, இன்றைய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின். தந்தை எவ்வழியோ, மகனும் அவ்வழியே என, நவீன தமிழ்நாட்டின் வளர்ச்சியை 'திராவிட மாடல்' ஆட்சியாக அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் சென்று கொண்டிருக்கிறார்.

ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்!

- நெல்லை பாபு

Leave a Reply

Cancel Reply

Your email address will not be published.

இணைந்திருங்கள்

தேர்தல் களம்

vote-image

2026இல் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்?

26%
11%
42%
15%
7%

முக்கிய பிரிவுகள்

அண்மைக் கருத்துகள்

  • user by Karthik

    சிறந்த நடிகர், நடிகைகளுக்கு 1 பவுன்

    quoto
  • user by Seithithalam

    Thanks for your great support,

    quoto
  • user by Karthik

    Kaipulla is one of the best

    quoto

Please Accept Cookies for Better Performance