தமிழக அரசியல் வரலாற்றில் தனித்துவமான இடத்தைப் பெற்ற இயக்கமாக திகழ்கிறது திராவிட முன்னேற்றக் கழகம். இந்த இயக்கம் வெறும் அரசியல் கட்சி மட்டுமல்ல; ஒரு சமூக சிந்தனை, ஒரு பண்பாட்டு இயக்கம், ஒரு அரசியல் கல்வி நிலையம் என்றும் பலர் அதை விவரித்து வருகின்றனர். அந்த இயக்கத்தில் பல தலைமுறைகள் தொண்டர்களாக வளர்ந்துள்ளனர். அந்த தலைமுறைகளில் ஒருவரின் மனவேதனையாகவே இன்று ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற கழக மாநாட்டை குறித்து நான் ஒரே ஒரு பதிவு மட்டுமே வெளியிட்டேன். அது கூட நமது முதல்வரைப் பற்றியது. ஆனால் வேறு எந்த பதிவும் நான் இடவில்லை. அதற்குக் காரணம், என் மனதை ஆழமாகக் குத்திக் கொண்டிருக்கும் ஒரு கோபம் மற்றும் வருத்தம் தான்.
நான் வசிக்கும் ஆலந்தூர் தொகுதியில் ‘மதி தியேட்டர்’ எதிரில்தான் கழகக் கூட்டங்கள் பெரும்பாலும் நடைபெறும். 1978–79 காலகட்டத்திலிருந்து இன்று வரை அங்கு நடந்த எந்தக் கூட்டத்தையும் நான் தவறவிட்டதில்லை என்று நம்பிக்கையுடன் சொல்ல முடியும். அப்போது தலைவர் கலைஞர் பேசுகிறார் என்றால், நண்பர்களுடன் சைக்கிள்களில் கூட்டமாக புறப்பட்டு சைதாப்பேட்டை தேரடித் தெரு வரை சென்று கூட்டங்களில் கலந்து கொண்ட நாட்கள் இன்னும் நினைவில் நிற்கின்றன.
எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த ஒரு சிறிய முடித்திருத்தகம்தான் எங்களுக்கு ஒரு வகையில் ‘அறிவாலயம்’ போல இருந்தது. அங்குதான் இலவசமாக ‘முரசொலி’ நாளிதழை வாசிப்போம். அரசியல் விவாதங்களும் அங்குதான் நடந்தன. தேர்தல் பரப்புரைகள் முடியும் நாளில், எவ்வளவு நள்ளிரவு நேரமாக இருந்தாலும் தலைவர் கலைஞர் அவர்கள் மேடவாக்கம் சாலை வழியாக காரில் திரும்புவார். அவர் காரில் செல்லும்போது நாங்கள் கையசைத்து வணக்கம் சொல்லி, எங்கள் விரலில் உதயசூரியன் சின்னத்தை காட்டி மகிழ்ந்தே வீட்டிற்கு திரும்புவோம். அந்த உணர்வை வார்த்தைகளால் விவரிக்க முடியாது.
நான் அரசியலுக்கு வந்தது எவ்வித அதிசயத்தாலும் அல்ல. “எம்.ஜி.ஆர் என்ன நிறம் தெரியுமா?” என்று ஆச்சரியப்பட்டு ஒரு கட்சியில் சேர்ந்தவன் அல்ல நான். என் தந்தையைப் பின்தொடர்ந்து கழகத்தில் சேர்ந்திருந்தாலும், என்னை உண்மையாக ஈர்த்தது பேரறிஞர் அண்ணாவின் புத்தகங்கள், தலைவர் கலைஞரின் தீவிரமான தமிழ்ப் பேச்சுகள் மற்றும் பேராசிரியர் அவர்களின் கொள்கைப் பிடிப்புதான்.
ஒரு காலத்தில் “நான் திமுக தொண்டன்” என்று சொல்லிக்கொள்வதிலேயே ஒரு பெருமிதம் இருந்தது. அந்த அடையாளம் நமக்குள் ஒரு தன்னம்பிக்கையையும் மரியாதையையும் தந்தது. நம்மை நாமே மதிக்கத் தொடங்கிய காலம் அது.
இந்த இயக்கம் எவ்வளவு பெரிய சக்தி என்பதை 1960 மற்றும் 1970-களில் பிறந்தவர்கள் நன்றாக அறிவார்கள். அப்போது பேரறிஞர் அண்ணா கூறிய “கடமை, கண்ணியம், கட்டுப்பாடு” என்ற மூன்று சொற்கள் ஒவ்வொரு தொண்டரின் மனதிலும் ஆழமாக பதிந்திருந்தன.
அது தெருமுனைக் கூட்டமாக இருந்தாலும், லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்ட மாநாடாக இருந்தாலும் தொண்டர்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் நடந்துகொள்வார்கள். ஒழுக்கம், ஒற்றுமை மற்றும் மரியாதை ஆகியவை திமுக தொண்டர்களின் அடையாளமாகவே இருந்தன.
ஆனால் சமீப காலங்களில் சில கூட்டங்களில் நான் இதுவரை பார்த்திராத ஒரு பழக்கம் உருவாகி வருகிறது. அது என்னவென்றால், சிலர் தங்களது தோளில் அணிந்திருக்கும் கட்சித் துண்டை கழற்றி தலைவர்கள் மீது வீசுவது.
இது எந்த வகையான கலாச்சாரம்?
அந்தத் துண்டில் அண்ணா உருவாக்கிய கட்சியின் கொடி இருக்கிறது. அந்தக் கொடியை தலைக்கு மேல் ஏந்திப் பிடிப்பது ஒரு மரியாதையின் அடையாளம். ஆனால் அதையே கழற்றி எறிவது, அதுவும் தலைவர்கள் மீது வீசுவது — அது கட்சிக்கும் தலைமைக்கும் நாம் காட்டும் மரியாதையா?
இந்தச் செயல் வெறும் சிறிய தவறு அல்ல. அது கட்சியின் பண்பாட்டு மரபை பாதிக்கும் ஒரு தவறான நடைமுறை. திமுக தொண்டர்கள் எப்போதும் நாகரிகம் தெரிந்தவர்கள், பண்புள்ளவர்கள் என்ற பெயரை பெற்றவர்கள். நாம் பேரறிஞர் அண்ணாவின் தம்பிகள் என்று பெருமையாக சொல்லிக்கொள்கிறவர்கள்.
அப்படியான நாம் இப்படிப்பட்ட வீண் கலாச்சாரத்தை ஏற்றுக்கொள்வது சரியானதா?
இந்த பழக்கத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும். கட்சியின் மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் இதுகுறித்து வெளிப்படையாக குரல் கொடுக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல், மாண்புமிகு முதல்வர் அவர்கள் இதுகுறித்து ஒரு சிறிய அறிக்கை வெளியிட்டாலே போதும். அதனால் இந்த தவறான போக்கு உடனடியாக நிற்கும்.
ஒரு இயக்கத்தின் வலிமை அதன் தலைவர்களால் மட்டுமல்ல, அதன் தொண்டர்களின் ஒழுக்கத்தாலும் தீர்மானிக்கப்படுகிறது. திமுக போன்ற வரலாற்று பெருமை கொண்ட இயக்கத்தில் அந்த ஒழுக்கம் தொடர்ந்து நிலைத்திருக்க வேண்டும்.
இந்த வேதனையையும் ஆதங்கத்தையும் யாராவது ஒருவர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். அதற்காகத்தான் இந்த கருத்தை வெளிப்படுத்துகிறேன்.
இது ஒருவரின் தனிப்பட்ட கோபம் அல்ல; இயக்கத்தை நேசிக்கும் ஒரு தொண்டரின் உள்ளங்கனலாக எடுத்துக்கொள்ள வேண்டும்.