சட்டமன்றத்தில் பதில் சொல்லாமல் வெளிநடப்பு: ஈபிஎஸ்-க்கு அமைச்சர் ரகுபதி கண்டனம்!
சட்டமன்றத்தில் பதிலளிக்காமல் ஓடுவது ஏன்? புறமுதுகு காட்டி ஓடுபவருக்கு ஓபன் சேலஞ்ச் தேவையா?" - எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கடும் கண்டனம்!
சென்னை: தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்க முடியாமல் வெளிநடப்பு செய்துவிட்டு, வெளியே வந்து சவால் விடுவது நியாயமா? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
விவாதத்தின் பின்னணி: சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், கள்ளக்குறிச்சி விவகாரம் மற்றும் அரசின் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்தார். அப்போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சில கேள்விகளை எழுப்பினார். அதற்கு முதலமைச்சர் ஆணித்தரமான பதில்களை வழங்கியபோது, அவையில் விவாதிக்கத் திராணியின்றி அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
அமைச்சர் ரகுபதியின் அடுக்கடுக்கான கேள்விகள்: இது தொடர்பாக அமைச்சர் ரகுபதி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ள முக்கிய அம்சங்கள்:
புறமுதுகு காட்டி ஓடுவது ஏன்?: "சட்டமன்றத்தில்தான் முதலமைச்சரும் நீங்களும் நேருக்கு நேர் இருக்கிறீர்கள். அங்கே கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் வெளிநடப்பு செய்துவிட்டு, வெளியே வந்து 'ஓபன் சேலஞ்ச்' (Open Challenge) எனப் பீலா விடுவது ஏன்?" என்று சாடியுள்ளார்.
லேப்டாப் திட்ட முடக்கம்: மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டு வந்த இலவச மடிக்கணினி திட்டத்தை திமுக அரசு முடக்கவில்லை. ஆனால், எடப்பாடி பழனிசாமி தனது ஆட்சியில் 2019-ஆம் ஆண்டோடு அந்தத் திட்டத்தைப் பாதியிலேயே முடக்கினார். இப்போது 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திமுக அரசை விமர்சிக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது?.
ஸ்டிக்கர் அரசியல்: "அதிமுக ஆட்சியில் 2015 பெருவெள்ளத்தின் போது, தன்னார்வலர்கள் கொடுத்த நிவாரணப் பொருட்களில் கூட ஜெயலலிதாவின் படத்தை ஸ்டிக்கராக ஒட்டியவர்கள் நீங்கள். இப்போது ஸ்டிக்கர் ஒட்டுவதாகப் பேசுவது வேடிக்கையாக உள்ளது" என அமைச்சர் பதிலடி கொடுத்துள்ளார்.
கடந்த கால வன்முறைகள்: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, பொள்ளாச்சி விவகாரம், கொடநாடு கொலை வழக்கு என அதிமுக ஆட்சியில் நடந்த சம்பவங்களைப் பட்டியலிட்ட அமைச்சர், "சிறப்பான ஆட்சி கொடுத்ததாகக் கூறும் உங்களுக்கு வெட்கமாக இல்லையா?" என்று காட்டமாக வினவினார்.
வாட்ஸ்அப் வதந்திகளை மட்டுமே நம்பி அரசியல் செய்யும் எடப்பாடி பழனிசாமிக்கு, உண்மையைச் சந்திக்கத் துணிவில்லை என்றும், மக்கள் முன்னிலையில் அவரது இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டதாகவும் அமைச்சர் ரகுபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.