புது தில்லி: மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தற்போது ஐந்து நாள் பயணமாக ஜெர்மனி சென்றுள்ளார். அங்கு அவர் பிஎம்டபிள்யூ (BMW) தொழிற்சாலையைப் பார்வையிட்டது மற்றும் இந்திய வம்சாவளியினரிடையே உரையாற்றியது என அவரது பயணம் தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், ராகுல் காந்தியின் இந்தப் பயணம் 'இந்தியாவிற்கு எதிரானது' என பாஜக கடுமையான தாக்குதலைத் தொடுத்துள்ளது.
பாஜகவின் முக்கிய குற்றச்சாட்டுகள்:
சர்ச்சைக்குரிய சந்திப்புகள்: ராகுல் காந்தி பெர்லினில் உள்ள ஹெர்டி பள்ளியின் (Hertie School) தலைவர் கொர்னேலியா வோல் (Cornelia Woll) என்பவரைச் சந்தித்த புகைப்படத்தை பாஜக வெளியிட்டுள்ளது. இவர், இந்தியாவிற்கு எதிராகத் தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் அமெரிக்க கோடீஸ்வரர் ஜார்ஜ் சோரோஸின் (George Soros) நிதி உதவியால் இயங்கும் ஒரு பல்கலைக்கழகத்தின் அறங்காவலராக இருக்கிறார் என பாஜக செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா குற்றம் சாட்டியுள்ளார்.
குளோபல் புரோகிரசிவ் அலையன்ஸ் (Global Progressive Alliance): உலகெங்கிலும் உள்ள 117 முற்போக்கு கட்சிகளின் கூட்டமைப்பான 'குளோபல் புரோகிரசிவ் அலையன்ஸ்' அழைப்பின் பேரிலேயே ராகுல் காந்தி ஜெர்மனி சென்றுள்ளார். இந்தக் கூட்டமைப்பில் காங்கிரஸ் மற்றும் சமாஜ்வாதி கட்சிகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த அமைப்பின் பின்னணியில் 'இந்திய எதிர்ப்பு சதி' இருப்பதாக பாஜக சந்தேகம் எழுப்பியுள்ளது.
வெளிநா மண்ணில் இந்தியாவுக்கு அவமானம்: நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடர் நடக்கும்போது ராகுல் காந்தி ஏன் வெளிநாடு செல்கிறார்? என கேள்வி எழுப்பியுள்ள பாஜக, "ஜார்ஜ் சோரோஸ் மற்றும் ராகுல் காந்தி இரு உடல் ஒரு உயிர்" என விமர்சித்துள்ளது. மேலும், இந்தியாவின் தேர்தல் முறை குறித்து அவர் வெளிநாடுகளில் விமர்சிப்பது 'மீர் ஜாபர்' செயலுக்கு சமம் என்றும் பாஜக சாடியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் விளக்கம்: இந்தக் குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்துள்ளது. ராகுல் காந்தி இந்தியாவின் பெருமையை நிலைநாட்டவே வெளிநாடு சென்றுள்ளதாகவும், அங்கு அவர் பிஎம்டபிள்யூ நிறுவனத்தில் இந்தியப் பொறியாளர்களின் திறமையை மெச்சிப் பேசியதாகவும் சாம் பிட்ரோடா மற்றும் சல்மான் குர்ஷித் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சர்வதேசக் கூட்டங்கள் ஏற்கனவே திட்டமிடப்பட்டவை என்பதால், நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நேரத்தில் இது அமைந்தது தற்செயலானது என்றும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.